tamilnadu

img

1920 - 2019 இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்மிக்க நூற்றாண்டு - என்.ராமகிருஷ்ணன்

வரும் அக்டோபர் 17ஆம் தேதி இந்தியாவின் புரட்சி இயக்க வரலாற்றில், இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் மகத்தான தினமாகும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் முந்தைய சோவியத் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை ஏழு தோழர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. வங்காளப் புரட்சியாளர் இயக்கத்தில் ஈடுபட்ட எம்.என்.ராய், அபனி முகர்ஜி. இந்திய நாட்டு விடுதலையில் நாட்டம்  கொண்டு ரஷ்யாவிற்குச் சென்ற முகமது அலி, முகம்மது ஷாபி சித்திக்கி, சென்னையின் பிரபல தேச பக்தரும், புரட்சிகர எண்ணம் கொண்டவரும், மகாகவி பாரதிக்கும், அவர் நடத்தி வந்த ‘இந்தியா’பத்திரிகைக்கும் அரும் பெரும் உதவிகள் புரிந்த எம்.பி.டி. ஆச்சார்யா, எம்.என்.ராயின் துணைவியார் எவ்லின் டிரெண்ட்ராய், அபனி முகர்ஜியின் துணைவியார் ரோஸா பிட்டிங் காப் ஆகிய ஏழு பேர்களே அந்தக்குழுவின் உறுப்பினர்கள். இக்கூட்டம் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

“மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் பிரகடனம் செய்த கோட்பாடுகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்கிறது என்பதுடன் இந்திய நிலைமைகளுக்கேற்றார் போல் ஒரு திட்டத்தை உருவாக்கும் பணியைச் செய்வ தென்றும் உறுதி பூணுகிறது.” இக்கூட்டம் முகமது ஷாபிக்கை செயலாளராகத் தேர்ந் தெடுத்தது. அந்த ஆண்டின் இறுதியில் மூன்று பேர் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு அமைக்கப்பட்டது.

எம்.பி.டி.ஆச்சார்யா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் தலைவர்

முகமது ஷாபிக் - செயலாளர்

எம்.என்.ராய் - மத்தியக்குழு உறுப்பினர். அத்துடன் அவர் லெனின் தலைமையிலான மூன்றாவது கம்யூனிஸ்ட்  அகிலத்தின் பொறுப்புகளிலும் இருந்தவர்.எம்.பி.டி.ஆச்சார்யா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் தலைவர் முகமது ஷாபிக் - செயலாளர் எம்.என்.ராய் - மத்தியக்குழு உறுப்பினர். அத்துடன் அவர் லெனின் தலைமையிலான மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் பொறுப்புகளிலும் இருந்தவர்.

சிங்காரவேலர், முசாபர் அகமது மற்றும் டாங்கே ஆகிய இந்த மூன்று தலைவர்களும் கம்யூனிச தத்துவத்தை விளக்குவதற்காக சென்னையிலும், கல்கத்தாவிலும், பம்பாயிலும் பத்திரிகைகள் துவங்கினார்கள். தொழிற்சங்க இயக்கம் உருவாக வித்திட்டார்கள். தொழிலாளி மற்றும் உழைப்பாளரிடையில் மார்க்சியக் கருத்துக்களை எளிமை யாக விளக்கிப் பேசினார்கள். முதலில் விவசாயி - தொழி லாளி கட்சியை துவங்கினார்கள். 1923ஆம் ஆண்டில் இந்தி யாவிலேயே முதன் முறையாக சிங்கார வேலர் ஏற்பாட்டில் சென்னையில் மேதினம் கொண்டாடப்பட்டது. 1928 ஆம்  ஆண்டில் சிங்காரவேலர், முகுந்தலால் சர்க்கார் தலைமை யில் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர் போராட்டத்தில் சிங்கார வேலருக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டில் அது 2 ஆண்டாக குறைக்கப்பட்டு அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். வெகு விரைவில் மார்க்சிய கருத்துக்களின் தாக்கத்தால் ஏராளமான அறிவு ஜீவிகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டனர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வீச்சைக் கண்டு ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசாங்கம் கம்யூனிஸ்ட்டு கள் மீது சதிவழக்குகள் போட்டு தண்டிக்க ஆரம்பித்தது.

  • பெஷாவர் கம்யூனிஸ்ட் சதி வழக்கு
  • கான்பூர் கம்யூனிஸ்ட் சதி வழக்கு
  • மீரட் சதி வழக்கு
  • சென்னை சதி வழக்கு என்று நான்கு பெரும் சதி வழக்குகளைப் போட்டு பல கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கடுங்காவல் தண்டனை விதித்தது. இவை நீங்கலாக தமிழகத்தில் நெல்லை சதி வழக்கு (1940-41), கோவை சதிவழக்கு (1940-41), மதுரை சதி வழக்கு (1946-47) போன்ற முக்கிய சதி வழக்கும் கம்யூனிஸ்ட்டுகள் மீது போடப்பட்டன. பலருக்கு கடுங் காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் முதுகலைப் பட்டப் படிப்பிற்காகவும், பார்-அட்லா படிப்பிற்காகவும் சென்ற அறிவு ஜீவிகள் பலர் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பினால் கம்யூனிஸ்ட்டுகள் ஆனார்கள். இந்தியா திரும்பியதும் வசதி மிக்க வாழ்வைத் துறந்து கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர்கள் ஆனார்கள். இவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள். பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி, ஜோதிபாசு, பூபேஷ் குப்தா, இந்திரஜித் குப்தர், ரேணு சக்கரவர்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.சுப்ரமணியம், மோகன் குமாரமங்கலம், அவரது சகோதரி பார்வதி கிருஷ்ணன், பார்வதியின் கணவர் என்.கே.கிருஷ்ணன் போன்றோர் ஆவர். இவர்களில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்ற சி.என்.சுப்ரமணியம், இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிக்கையான ‘டெய்லி ஒர்க்கர்’ ஏட்டில் உதவி ஆசிரியராக பணியாற்றியதோடு 1936 ஆம் ஆண்டில் சென்னையில் உருவாக்கப்பட்ட முதல் தமிழக கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையின் செயலாளரும் ஆவார்.   

பாரிஸ்டர்கள் வி.ஜி.ராவ், ஏ.ராமச்சந்திரன் ஆகிய இருவரும் சட்டத்துறையில் தொழிற்சங்க இயக்கத்திற்காக, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காக இறுதிவரை பாடுபட்டவர்கள் ஆவர்.  மீரட் சதி வழக்கு நடைபெற்று வந்த போது மகாத்மா காந்தியே மீரட் சிறைக்குச் சென்று அங்கிருந்த கம்யூ னிஸ்ட் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். 4 ஆண்டுகாலம் நீடித்த அந்த வழக்கில் பலருக்கு கடுங்  காவல் தண்டனை விதிக்கப்பட்டதை உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனும், பிரபல அறிஞர் ரோமன் ரோலந்தும் வன்மையாகக் கண்டித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அடுத்துவந்த கால கட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் மாபெரும் வர்க்கப் போராட்டங்களை, மக்கள் உரிமை இயக்கங்களை நடத்தியது.

  • விளைச்சலில் ஐந்தில் மூன்று பங்கு கோரும் வங்கத்தின் ‘தேபாகா போராட்டம்’
  • விவசாயிகளின் உரிமைக்காக, தொழிலாளர் உரிமைக்காக 400க்கும் மேற்பட்ட தோழர்களை பலி கொடுத்துப் போராடிய கேரளத்தின் புன்னப்புரா - வயலார் எழுச்சி, 4000க்கும் மேற்பட்ட தோழர்கள் தங்கள் இன்னுயிர் ஈந்து நடத்திய தெலுங்கானா ஆயுத எழுச்சி
  • சவுக்கால் அடிக்கப்பட்டு வேலை வாங்கப்பட்ட லட்சக்கணக்கான தஞ்சை பண்ணையடிமைகளை விடுவிக்க கம்யூனிஸ்ட்கள் தலைமையில் நடத்த வீரப் போராட்டங்கள்.
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தின் ஒர்லி பகுதியில் வசித்த ஆதிவாசி மக்களை நிலப்பிரபுக்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்கள் பிடியிலிருந்து விடுவிக்க நடத்தப்பட்ட வீரப் போராட்டங்கள்.
  • பம்பாய், ஷோலாப்பூர், கல்கத்தா, கோவை, மதுரை, விக்ரமசிங்கபுரம் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட தொழிலாளி வர்க்கத்தின் வீரப் போராட்டங்கள்.
  • அஸ்ஸாம் மாநிலத்தின் சுர்மா பள்ளத்தாக்குப் பகுதியில் விவசாயிகள் நடத்திய வீரப் போராட்டங்கள்
  • 1943-44 ஆம் ஆண்டுகளில், வங்கப் பஞ்சம் காரணமாக பல லட்சம் மக்கள் இறந்து பல லட்சம் பேர் பாதிக்கப்பட்ட பொழுது வங்கத்திற்கு உதவி கோரி நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் இயக்கம் உதவி திரட்டியது போன்றவை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான சாதனைகளாகும்.
  • 1946 ஆம் ஆண்டின் கடற்படை வீரர்கள் எழுச்சிக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் கிளர்ந்தெழுந்து ஆதரவு கொடுத்தது மகத்தான வரலாறாகும்.


இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறென்பது, 1920 ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்து, 1964ஆம் ஆண்டில் உருவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலா றென்பது, வீரஞ்செறிந்த, ஒப்பற்ற தியாகத்தின் அர்ப்பணிப்பு நிறைந்த வரலாறாகும். ஆயிரக்கணக்கான தோழர்கள் இந்த இயக்கத்திற்காக தங்கள் இன்னுயிர் ஈர்ந்துள்ளனர். பல ஆயிரம் கம்யூனிஸ்ட்டுகள் கொடிய சிறைவாசத்தை ஆண்டுக்கணக்கில் அனுபவித்துள்ளனர். சதீஷ் பக்ராஷி, கணேஷ்கோஷ், சுபோத்ராய், ஹரே கிருஷ்ண கோனார், சிவவர்மா,நாராயண ராய் போன்ற தோழர்கள் அந்தமான் தீவுச் சிறையில் வாடி வதங்கியுள்ளனர். கையூர் தியாகிகள், சின்னியம்பாளையம், தியாகிகள் மதுரை தியாகி பாலு போன்ற தீரர்கள் என பலர் தூக்கு மேடை ஏறினார்கள். சேலம், கடலூர் சிறைகளில் பல கம்யூனிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய விடுதலைக்காகவும், இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காகவும் அதிக காலம் சிறை சென்றவர் சதீஷ்பக்ராஷி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் தோழர். அவர் சிறைவாசம் அனுபவித்தது 32 ஆண்டுகள். அவரின் தலை மறைவு காலம் 10 ஆண்டுகள்! மே.வங்கத்தில் தோழர் கணேஷ் கேரஷின் சிறைவாசம் 28 ஆண்டுகள்! சிட்டகாங் ஆயுதக்கிடங்கை கைப்பற்றிய வழக்கில் வீராங்கனை கல்பனா தத் பல ஆண்டுகள் கடுங் காவல் தண்டனை பெற்றார். பல நூற்றுக்கணக்கான தோழர்கள் ஆயுள் தண்டனை அனுபவித்துள்ளனர்.

ஆக இந்தியாவின் கம்யூனிஸ்ட் இயக்கம் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கமென்பது தியாக வேள்வி யில் புடம் போட்டு எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான வரலாறு. வெண்மணியின் தியாகத்திற்கு ஈடு இணை ஏது? இந்த நூறு ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான சாதனைகளை பெருமையுடன் பட்டியலிடலாம். ‘டொமினியன் அந்தஸ்து’ என்ற குடியேற்ற நாட்டு அந்தஸ்து இந்தியாவிற்குப் போதும் என்று இந்திய தேசிய  காங்கிரஸ் தலைவர்கள் கோரி வந்த நேரத்தில் ‘இந்தியா விற்குத் தேவை முழுச் சுதந்திரம்’ என்ற முழக்கத்தை முதலில் எழுப்பியது இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்.

  • நிலப்பிரபுத்துவம் முற்றாக ஒழிக்கப்பட்டு அந்த நிலம் அனைத்தும் நிலமற்ற விவசாயிகளுக்கு பிரித்தளிக்கப்பட வேண்டுமென்ற முதல் முழக்கத்தை எழுப்பியது இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்.
  • 500க்கும் மேற்பட்ட மன்னராட்சி பகுதிகள் ஒழிக்கப்பட்டு மொழி வழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மாநில மொழிகள், மாநில கலாச்சாரம், பண்பாடு உயர்ந்தோங்குமென்று முதன் முதலாக வலியுறுத்தியது இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கமே!
  • காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி  நேரம் உழைத்து மாதம் 5 ரூபாய், 6 ரூபாய் கூலி பெற்று மருகி வந்த தூத்துக்குடி கோரல் மில் தொழி லாளிகளுக்காக இந்தியாவில் 1908 ஆம் ஆண்டில் முதன் முதலாக சங்கம் அமைக்கப் போராடியவர். மாபெரும் தேசபக்தர் வ.உ.சிதம்பரனார் அவருக்கு கடுங்காவல் தண்டனை விதித்து அந்த இயக்கத்தை ஒடுக்கியது
  • ஆங்கிலேய அரசு! ஆனால் 1920ஆம் ஆண்டுகளி லிருந்து கம்யூனிஸ்ட்டுகள் தலைமை தாங்கி நாடு முழு வதும் நடத்திய துணிச்சலான தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் விளைவாக இன்று தொழிலாளி வர்க்கமும், இதர உழைக்கும் பகுதியினர் அனைவரும் கணிசமான கூலி உயர்வு, ஊதிய உயர்வு பெற்று வருவதிலிருந்தே, விலைவாசி உயர்வுக் கேற்ற கூடுதல் கூலி, ஊதியம் கேட்டுப் போராட்டம் நடத்துவதிலிருந்தே நன்கறிய முடியும்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றிய  நாளிலிருந்தே அது தீண்டாமை ஒழிப்பிற்காகவும், சமூக சமத்துவத்திற்காகவும், மத நல்லிணக்கத்  திற்கு ஆதரவாகவும் தன் குரலை எழுப்பி  வருகிறது. அது மட்டுமல்ல, லட்சக்கணக்கான  தலித் மக்களையும், இதர மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களையும் பண்ணை அடிமைகளாக வைத்து கொடூரச் செயல்புரிந்து வந்த நிலப் பிரபுத்துவ சக்திகளை தஞ்சை மண்ணில் ஒடுக்கி அந்த மக்களை உரிமை  பெற்ற மக்களாக்கியது கம்யூனிஸ்ட் இயக்கமே. அதே போன்று பல்லாயிரக்கணக்கான ஆதிவாசிகளை நிலப்பிரபுக் கள் மற்றும் மகாஜன்கள் என்ற கந்துவட்டிக்காரர்களிடமிருந்து மகாராஷ்டிராவின் ஒர்லி பகுதியில் மீட்டது கம்யூனிஸ்ட்டுக் கட்சியே! இதேபோன்று கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கி நடத்திய தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டமென்பது ஏழை, எளிய விவசாயிகளும், கைவினைஞர்களும், நிலப்பிரபுக் களுக்கு ‘வெட்டி’ எனப்படும்

இலவசமாக பொருட்களைத் தர வேண்டும், சேவை செய்ய வேண்டும் என்ற ஆண்டாண்டுக்கால அடிமைத்தனத்தை முற்றி லும் ஒழித்துக் கட்டியதாகும். ஒன்றல்ல, இரண்டல்ல, ஓராயிரம் சாத னைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கமும், மார்க்சிஸ்ட் இயக்கமும் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றன. இந்த 100 ஆண்டுகளில் அது சந்திக்காத சவால் எதுவுமில்லை.  இன்று அது இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், மக்கள் ஒற்றுமைக்கும், மத நல்லிணக்கத்திற்கும், சமூக நீதிக்கும், காவலனாக நின்று போராட வேண்டியுள்ளது.  130 கோடி இந்திய மக்களை மத, இன, மொழி அடிப்படையில் பிரித்தாளும் மோடி அரசாங்கத்தின் ஆபத்தான  கொள்கைகளுக்கெதிராக, இந்திய நாட்டின் உழைப்பாளி மக்களைப் பிழிந்து நாட்டின் பொருளாதாரத்தையே ஏகபோக கார்ப்பரேட் முதலாளிகளின் காலடியில் வைக்கும் அதன் நாசகரப் பொருளாதாரக் கொள்கைகளுக்கெதிராக, நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவரும் இந்துத்துவா வெறிப் போக்கிற்கெதிராக 100 ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கம் பெரும் போராட்டம் நடத்தி வருகிறது.

கம்யூனிஸ்ட் இயக்கமானது பி.ஜே.பி தலைமையிலான இந்துத்துவா என்றழைக்கப்படும் இந்து மதவாத சக்திகளை, நவீன பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடி வருகிறது. அதே போன்று சாதிய ஆதிக்கச் சக்திகளின் கொடூரத் தாக்குதலை முறியடித்து தலித் மக்களையும், பழங்குடி மக்களையும் காக்கும் போர் வீரனாக நின்று செயல்பட வேண்டியுள்ளது. இந்திய, பன்னாட்டு முதலாளிகளின் தாக்குதல்களிலிருந்து தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைப்பாளி மக்களைப் பாதுகாக்கும் கேடயமாகவும், பெண் உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வீரனாகவும் செயல்பட்டு வருகிறது. இன்று உலகில் 7 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்தாற் போல, பல லட்சக்கணக்கான கட்சி உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியும் செயல்பட்டு வருவது பெருமைக்குரிய நிகழ்வாகும். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூறு ஆண்டுக்கால வரலாறு என்பது எழுச்சியூட்டும் காவியமாகும்! அதன் பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்!

;